ஆதாரங்களுக்குத் திரும்பு

உங்களுக்கு எந்த வகை உதவி தேவை என்பது இன்னும் தெரிந்திருக்க வேண்டியதில்லை

கடினமான ஓர் அனுபவத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, எங்கிருந்து தொடங்குவது என்பது திணறடிப்பதாகத் தோன்றலாம். நடந்த ஒன்றைப் பற்றிக் கேள்விகள் இருக்கலாம்; உங்கள் உணர்வுகள் குறித்துத் தெளிவில்லாமல் இருக்கலாம்; நீங்கள் எதிர்கொண்டது கவலைப்பட வேண்டிய ஒன்றா என்று யோசிக்கலாம். உங்களுக்கு மருத்துவப் பராமரிப்பு, ஆலோசனை, சட்ட உதவி அல்லது வெறும் கூடுதல் தகவல் ஆகியவற்றில் எது தேவை என்பதிலும் உறுதியில்லாமல் இருக்கலாம்.

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல வேண்டியதில்லை. தகவல்களைத் தேடுவது என்பது, நீங்கள் தயாராவதற்கு முன்பே ஒரு முடிவை எடுக்க வேண்டும், உங்கள் அனுபவத்தை யாரிடமாவது விளக்க வேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாகாது. சில நேரங்களில், என்ன கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் தெரிவுகளை ஆராய்வதற்கான இடைவெளியை உங்களுக்கே அளித்துக்கொள்வதே முதல் படியாகும்.

எல்லாப் பதில்களும் தெரிந்திருக்க வேண்டியதில்லை

கடினமான அனுபவங்களுக்கு மக்கள் வெவ்வேறு விதங்களில் பதிலளிக்கிறார்கள். உங்களைத் துன்புறுத்துவது என்ன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கலாம்; அல்லது உங்கள் உணர்வுகளைச் சொற்களில் வடிப்பது கடினமாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு நண்பருக்காகத் தகவல் தேடலாம்; ஒரு உறவைப் புரிந்துகொள்ள முயலலாம்; அல்லது கடந்த காலத்தில் நடந்த ஒன்றை ஆராயலாம்.

நீங்கள் இப்படித்தான் உணர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே வழி என்று எதுவும் இல்லை; தகவல்களைத் தேடத் தொடங்க, சரியான சொற்களை நீங்கள் கண்டுபிடிக்கவும் வேண்டியதில்லை. அவற்றின் பொருள் என்ன என்பது இன்னும் தெரியாவிட்டாலும் உங்களுக்குக் கேள்விகள் இருக்கலாம். உடனடியாக ஒரு முடிவுக்கு வராமலேயே நீங்கள் தெளிவற்றதாக உணரலாம். எந்த வகை ஆதரவை, அது தேவைப்பட்டால், நாடுவது என்று உறுதியாகத் தெரியாதபோதும், உங்கள் தெரிவுகளைப் புரிந்துகொள்வது ஒரு பயனுள்ள தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

உங்களுக்கு எந்தச் சேவை தேவை என்று தெரியாவிட்டால்?

ஆதரவுச் சேவைகள் பல்வேறு வகையான உதவிகளை வழங்கலாம்; எங்கிருந்து தொடங்குவது என்பது எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. ஒவ்வொரு வகைச் சேவையும் என்ன வழங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது, உடனே தெரிவு செய்ய வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல் சாத்தியங்களை ஆராய உதவும்.

  • மருத்துவ ஆதரவு: சுகாதாரத் தொழில்வல்லுநர்கள் காயங்களை மதிப்பிடவும், உடல்நலக் கவலைகளைப் பற்றி உரையாடவும், கிடைக்கும் பராமரிப்பை விளக்கவும் முடியும்.
  • உளவியல்–சமூக ஆதரவு: ஆலோசகர்களும் மனநலத் தொழில்வல்லுநர்களும் உணர்வுசார் கவலைகளைப் பற்றிப் பேசுவதற்கான ஓர் இடத்தை வழங்கி, ஆதரவு வழிகளை ஆராய உதவ முடியும்.
  • சட்ட உதவி: தகுதிவாய்ந்த தொழில்வல்லுநர்களும் தொடர்புடைய நிறுவனங்களும் சட்ட உரிமைகள், நடைமுறைகள் மற்றும் சாத்தியமான தெரிவுகளை விளக்க முடியும்.
  • சமூகம் சார்ந்த ஆதரவு: நிறுவனங்கள் தங்கள் சேவைகளைப் பொறுத்து தகவல்கள், பரிந்துரைகள் அல்லது நடைமுறை உதவிகளை வழங்கலாம்.

உங்கள் சூழ்நிலைக்கு எந்த வகை பொருந்தும் என்பதை, மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பே நீங்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. பல்வேறு சேவைகளைப் பற்றி வாசித்து, அவற்றில் ஏதேனும் உங்கள் சூழ்நிலைக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறதா என்பதை முடிவு செய்வதன் மூலம் நீங்கள் தொடங்கலாம்.

தகவல்கள் உங்கள் தெரிவுகளைப் புரிந்துகொள்ள எவ்வாறு உதவும்?

நம்பகமான தகவல்கள், அனுபவங்களைப் புரிந்துகொள்ளவும், தீங்கு விளைவிக்கக்கூடிய நடத்தைகளை அடையாளம் காணவும், உங்களுக்குக் கிடைக்கும் வளங்களைப் பற்றி அறியவும் உதவும். உதாரணமாக, சம்மதம் மற்றும் தனிப்பட்ட எல்லைகள் பற்றி வாசிப்பது, உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய ஒரு சந்திப்பைப் புரிந்துகொள்ள உதவலாம்.

ஒரு குறிப்பிட்ட சேவையிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம், என்ன கேள்விகளைக் கேட்கலாம், அந்த நிறுவனத்தை எவ்வாறு தொடர்புகொள்வது என்பதைப் புரிந்துகொள்ளவும் தகவல்கள் உதவும். இந்த விவரங்கள் கைவசம் இருப்பது, உங்கள் அடுத்த படிகளைப் பரிசீலிப்பதை எளிதாக்கலாம்.

முக்கியமாக, உங்கள் தெரிவுகளைப் பற்றி அறிந்துகொள்வது, ஒரு சேவையைப் பயன்படுத்த வேண்டிய கடப்பாட்டை உருவாக்காது. நீங்கள் வாசிக்கலாம், சிந்திக்கலாம், பின்னர் மீண்டும் இந்தத் தகவல்களுக்குத் திரும்பலாம். உங்கள் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் உங்களுக்கு எது பொருத்தமாகத் தோன்றுகிறது என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.

தொடங்குவதற்கு SafeHerSpace எவ்வாறு உதவ முடியும்

இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான தகவல்களையும் ஆதரவுச் சேவைகளையும் எளிதில் கண்டறியும்படி செய்யவே SafeHerSpace உருவாக்கப்பட்டது. எந்த நிறுவனத்தைத் தொடர்புகொள்வது அல்லது எந்த வகை உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியாதபோது, சரியான ஆதரவைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

எங்கள் பன்மொழி வளத் தளத்தின் மூலம், ஆதரவு நிறுவனங்கள், மனநலம் மற்றும் மீட்சிக்கான வளங்கள், கிடைக்கும் சேவைகள் பற்றிய தகவல்களை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். ஒவ்வொரு நிறுவனத்தையும் தனித்தனியாகத் தேட வேண்டிய அவசியமின்றி, சாத்தியமான ஆதரவு வழிகளை ஓரிடத்திலேயே ஆராய உதவும் வகையில் எங்கள் வள வரைபடமும் அடைவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

SafeHerSpace சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது; இதனால் மக்கள் தங்களுக்குப் புரியும் மொழியில் தகவல்களை அணுக முடிகிறது. நீங்கள் உங்களுக்காகத் தேடினாலும், நீங்கள் அக்கறை கொண்ட ஒருவருக்கு ஆதரவளிக்கத் தேடினாலும், அல்லது வெறுமனே மேலும் அறிய விரும்பினாலும், உங்கள் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கக்கூடிய வளங்களைக் கண்டறிய இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு என்ன தேவை என்று சரியாகத் தெரிந்த நிலையில் நீங்கள் வர வேண்டியதில்லை. தகவல்களை ஆராய்வதன் மூலமும், பல்வேறு சேவைகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமும் தொடங்கலாம்; இன்னொரு படியை எடுக்க விரும்புகிறீர்களா என்பதைப் பின்னர் தீர்மானிக்கலாம்.

உங்கள் சொந்த வேகத்தில் நீங்கள் முன்னேறலாம்

தகவல்களைத் தேடுவதற்கு முன் தெளிவான திட்டம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில நிமிடங்கள் வள அடைவை ஆராயலாம்; ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி வாசிக்கலாம்; அல்லது நீங்கள் தயாராக உணரும்போது மீண்டும் பார்ப்பதற்காகத் தகவல்களைச் சேமித்து வைக்கலாம்.

ஒரு சேவையைத் தொடர்புகொள்ள நீங்கள் முடிவு செய்தால், தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு முன், அது வழங்கும் ஆதரவு, அதன் இரகசியத்தன்மை ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைத் தேவைகள் பற்றிக் கேட்கலாம். ஒரு சேவையால் உங்களுக்கு உதவ முடியாவிட்டால், பொருத்தமான வேறொரு வளத்தைப் பரிந்துரைக்க முடியுமா என்று கேட்கலாம்.

உங்கள் இணையச் செயல்பாடுகளை யாராவது கண்காணிக்கக்கூடும் என்று நீங்கள் கவலைப்பட்டால், தகவல்களைத் தேடும்போது உங்கள் இலக்கமுறை (டிஜிட்டல்) பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் ஆபத்தை அதிகரிக்காத ஒரு வழியைத் தெரிவு செய்யுங்கள்; நீங்கள் உடனடி ஆபத்தில் இருந்தால் அவசர உதவியை நாடுங்கள்.

இன்று உங்களுக்குத் தெரிய வேண்டியதிலிருந்து தொடங்குங்கள்

நீங்கள் தொடங்குவதற்கு முன், உங்கள் அனுபவத்துக்குப் பெயரிட வேண்டியதில்லை, அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியதில்லை, எந்தச் சேவை உங்களுக்குப் பொருத்தமானது என்பதை அறிந்திருக்கவும் வேண்டியதில்லை. ஒரு கேள்வி இருந்து, அதை நன்கு புரிந்துகொள்ள விரும்பினாலே போதும்.

SafeHerSpace இல், நம்பகமானதும், புரிந்துகொள்ளக்கூடியதும், தீர்ப்பிடுதல் இல்லாததுமான தகவல்களை அணுகுவதற்கு ஒவ்வொருவரும் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் சொந்த வேகத்தில் ஆதரவு வழிகளை ஆராயும்படி, அவற்றைக் கண்டறிவதை எளிதாக்குவதே எங்கள் நோக்கம்.

உங்களுக்கு எந்த வகை உதவி தேவை என்பது இன்னும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. என்ன கிடைக்கிறது என்பதை அறிவதிலிருந்து நீங்கள் தொடங்கலாம். இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தகவல்கள், ஆதரவுச் சேவைகள் மற்றும் மீட்சி வளங்களைக் கண்டறிய SafeHerSpace ஐ ஆராயுங்கள். உங்கள் அடுத்த படி ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம்; இப்போதைக்கு அதுவே போதும்.