ஆதரவு சேவையைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிதானதல்ல. தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் சிதறிக் கிடக்கலாம்; தொடர்பு விவரங்கள் மாறலாம்; தமக்குத் தேவையான உதவியை எந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதை அறிவதும் கடினமாக இருக்கலாம். பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் (SGBV) பாதிக்கப்பட்டவர்களுக்கு, இத்தகைய சவால்கள் ஏற்கெனவே கடினமான தேடலை இன்னும் அழுத்தம் நிறைந்ததாக ஆக்கிவிடக்கூடும்.
SafeHerSpace இல், நம்பகமான ஆதரவுத் தகவல்களை எளிதில் கண்டறியும்படி செய்வதே எங்கள் நோக்கம். எங்கள் வள அடைவு, ஆய்வு, நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடனான தொடர்பாடல், மேலும் சேவைத் தகவல்களைச் சேர்ப்பதற்கு முன் அவற்றைச் சரிபார்க்கும் முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படுகிறது. தொடர்புடைய வளங்களை ஒரே இடத்தில் தொகுப்பதன் மூலம், இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் தெரிவுகளை மேலும் தெளிவாக ஆராய உதவ விரும்புகிறோம்.
ஆதரவு சேவைகளை நாம் எவ்வாறு அடையாளம் காண்கிறோம்?
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களையும் நிபுணர்களையும் அடையாளம் காண்பதிலிருந்தே எங்கள் பணி தொடங்குகிறது. இதில் மனநலம், ஆலோசனை, சட்ட உதவி, சுகாதாரப் பராமரிப்பு, பெண்கள் உரிமைகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு ஆகிய துறைகளில் செயல்படும் சேவைகள் அடங்கும்.
தொடர்புடைய சேவைகளை அடையாளம் காண ஆய்வுகள், பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். உளவியல்–சமூக ஆதரவு, மருத்துவப் பராமரிப்பு, சட்டத் தகவல்கள், பாதுகாப்பு தொடர்பான உதவிகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்ட கிடைக்கக்கூடிய உதவி வகைகளையும் நாங்கள் ஆராய்கிறோம். இது, கிடைக்கும் வளங்களின் வீச்சைப் புரிந்துகொள்ளவும், தகவல்கள் அல்லது ஆதரவு வழிகள் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களை அடையாளம் காணவும் எங்களுக்கு உதவுகிறது.
தகவல்களை நாம் எவ்வாறு சரிபார்க்கிறோம்?
ஒரு அடைவு, அதிலுள்ள தகவல்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும்போதுதான் பயனுள்ளதாகும். எனவே, ஒரு நிறுவனம் பற்றித் திரட்டப்பட்ட தகவல்கள், அது உண்மையில் வழங்கும் சேவைகளைப் பிரதிபலிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயல்கிறோம்.
இந்தச் செயல்முறையில், கிடைக்கும் தகவல்களை மீளாய்வு செய்வதுடன், இயலுமான இடங்களில் நிறுவனங்களுடன் அல்லது தொடர்புடைய பிரதிநிதிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் சேவைகளையும் தொடர்பு விவரங்களையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். சேவை கிடைக்கும் தன்மை, தகுதி வரன்முறைகள், செயல்படும் நேரம், வழங்கப்படும் மொழிகள், கட்டணங்கள் மற்றும் பரிந்துரைத் தேவைகள் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டிய தகவல்களில் அடங்கும். இந்த விவரங்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடலாம்; காலப்போக்கில் மாறவும் கூடும்.
சரிபார்ப்பு என்பது ஒரு முக்கியமான வேறுபாடு: இணையத்தில் ஒரு நிறுவனத்தைக் கண்டுபிடிப்பதால், அதன் சேவைகள் பற்றிய ஒவ்வொரு விவரமும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்று பொருளாகாது. எல்லாப் பதிவுகளும் சமமாகச் சரிபார்க்கப்பட்டவை போலக் காட்டாமல், சரிபார்க்கப்பட்ட தகவல்களையும் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தகவல்களையும் வேறுபடுத்திக் காட்ட நாங்கள் முயல்கிறோம்.
வள அடைவை நாம் எவ்வாறு ஒழுங்கமைக்கிறோம்?
தொடர்புடைய சேவைகள் அடையாளம் காணப்பட்டதும், மக்கள் தாம் தேடுவதைக் கண்டறிய உதவும் வகையில் தகவல்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். SafeHerSpace, ஆதரவு நிறுவனங்கள் மற்றும் மீட்சிக்கான வளங்கள் பற்றிய தகவல்களை ஒரு வள வரைபடம் (resource map) மற்றும் அடைவு மூலம் ஒன்றிணைக்கிறது.
மனநல ஆதரவு, ஆலோசனை, சட்ட உதவி, மருத்துவப் பராமரிப்பு மற்றும் பிற தொடர்புடைய சேவைகள் போன்ற, மக்களுக்குத் தேவைப்படக்கூடிய உதவி வகைகளின் அடிப்படையில் வளங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனம் என்ன வழங்குகிறது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவும், மேலும் அறிந்துகொள்ளலாமா என்று தீர்மானிக்கவும் தெளிவான விளக்கங்கள் உதவுகின்றன.
எல்லோருக்கும் ஒரே சேவையைப் பரிந்துரைப்பது இதன் நோக்கமல்ல. ஒவ்வொருவரின் சூழ்நிலையும் வேறுபட்டது; மிகப் பொருத்தமான தெரிவு அவர்களின் தேவைகள், இருப்பிடம், விருப்பங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய சேவைகளைப் பொறுத்தது. அந்தத் தெரிவுகளை ஆராய்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாகவே இந்த அடைவு அமைகிறது.
SafeHerSpace ஏன் பன்மொழிகளில் உள்ளது?
SafeHerSpace தகவல்களைச் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அணுகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உணர்வுபூர்வமான அனுபவங்கள், சுகாதாரம் அல்லது சட்ட விவகாரங்கள் பற்றிய தகவல்களாக இருக்கும்போது, ஒருவர் தம் தெரிவுகளை எவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்கிறார் என்பதை மொழி தீர்மானிக்கக்கூடும்.
மூல உள்ளடக்கத்தின் பொருளைப் பாதுகாத்தபடி, தெளிவான, எளிதில் புரியும் மொழியில் தகவல்களை வழங்க நாங்கள் முயல்கிறோம். ஆங்கிலம் வாசிப்பதில் வசதியானவர்களுக்கு மட்டும் அணுகலை வரையறுக்காமல், இலங்கை முழுவதும் உள்ள மக்களுக்கும் இந்த வளம் பயனுள்ளதாக இருக்க, பன்மொழி அணுகல் ஒரு முக்கியப் பகுதியாகும்.
வளத்தை எவ்வாறு பயனுள்ளதாக வைத்திருக்கிறோம்?
நிறுவனங்கள் தங்கள் சேவைகள், தொடர்பு விவரங்கள் மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகளைப் புதுப்பிக்கும்போது ஆதரவுத் தகவல்களும் மாறலாம். எனவே, பயனுள்ள அடைவைப் பராமரிக்க ஒருமுறை தகவல்களைத் திரட்டுவது மட்டும் போதாது.
மாற்றங்கள் அடையாளம் காணப்படும்போது தகவல்களைப் புதுப்பிக்க அனுமதிக்கும் இணையதளப் பின்புலம் (backend) SafeHerSpace இடம் உள்ளது. அடைவைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்ப அடித்தளத்தை இது வழங்குகிறது; ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்க, தொடர்ச்சியான தொடர்பாடல், தகவல் சரிபார்ப்புகள் மற்றும் மீளாய்வுகள் முக்கியமானவை.
ஒரு பதிவு, ஒரு சேவை தற்போது கிடைக்கிறது என்பதற்கோ, ஒவ்வொருவருக்கும் பொருத்தமானது என்பதற்கோ உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு நிறுவனத்தின் தற்போதைய சேவைகள், தகுதித் தேவைகள் மற்றும் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்த வாசகர்கள் அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம். இந்த வரம்புகளை உணர்ந்தபடியே, கிடைக்கும் தகவல்களை முடிந்தவரை தெளிவாகவும் பயனுள்ளதாகவும் வழங்க நாங்கள் முயல்கிறோம்.
அக்கறையுடன் SafeHerSpace ஐ உருவாக்குதல்
SafeHerSpace என்பது “Beyond Survival” என்ற ஆய்வு முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகவல்களையும் நீண்டகால மீட்சிக்கான வளங்களையும் அணுகும் வாய்ப்பை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது. தற்போதுள்ள ஆதரவு சேவைகளை ஆராய்வது, தொடர்புடைய பங்குதாரர்களுடன் ஈடுபடுவது, மக்கள் தம் தெரிவுகளைப் புரிந்துகொள்ள உதவும் அணுகத்தக்க வளத்தை உருவாக்குவது ஆகியவை இப்பணியில் அடங்கும்.
எங்கள் அணுகுமுறை ஒரு எளிய கொள்கையால் வழிநடத்தப்படுகிறது: ஆதரவு பற்றிய தகவல்கள் தெளிவாகவும், பொறுப்புடனும், அக்கறையுடனும் வழங்கப்பட வேண்டும். ஓர் அடைவு எதை வழங்க முடியும் என்பதில் வெளிப்படையாக இருப்பது, துல்லியத்தைக் கவனமாகக் கருதுவது, ஒவ்வொருவரின் சூழ்நிலையும் வேறுபட்டது என்பதை ஏற்றுக்கொள்வது ஆகியவை இதன் பொருள்.
ஆதரவைத் தேடுவதை ஓரளவு குறைந்த அழுத்தமுள்ளதாக ஆக்குவதே SafeHerSpace இன் நோக்கம். சேவைகளை ஆராய்ந்து, இயலுமான இடங்களில் தகவல்களைச் சரிபார்த்து, தொடர்புடைய வளங்களைச் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், மக்கள் தங்கள் அடுத்த படிகளை ஆராய்வதற்குப் பயன்படும் தகவல்களைக் கண்டறிய உதவுவோம் என நம்புகிறோம்.
ஏனெனில், நம்பகமான வளம் என்பது நிறுவனங்களைப் பட்டியலிடுவது மட்டுமல்ல. என்ன கிடைக்கிறது, எங்கே தேட வேண்டும், தம் சொந்த வேகத்தில் தெளிவான முடிவுகளை எவ்வாறு எடுப்பது என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதே அது.