நீங்கள் அக்கறையுடன் நினைக்கும் ஒருவருக்கு ஆதரவாக இருப்பது
நீங்கள் அக்கறையுடன் நினைக்கும் ஒருவர், தாங்கள் அனுபவித்த பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறை பற்றிய அனுபவத்தை உங்களிடம் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டால், அந்த நம்பிக்கை மிகவும் மதிப்புமிக்கது. நீங்கள் சரியான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்றோ, எல்லாவற்றிற்கும் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, நீங்கள் அவர்களுடன் இருப்பதும், பொறுமையாக இருப்பதும், அவர்கள் சொல்வதை நம்புவதும் — என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பதைவிட முக்கியமானதாக இருக்கலாம்.
பாலியல் வன்முறைக்குப் பிறகு ஒருவருக்கு ஆதரவாக இருப்பதற்கு ஒரே ஒரு சரியான வழி கிடையாது. ஒருவருக்கு உதவியாக இருக்கும் ஒன்று, இன்னொருவருக்கு அதேபோல் இருக்காமல் இருக்கலாம். முக்கியமாக, அவர்களைக் கவனமாகக் கேட்பதும், அவர்களின் முடிவுகளை மதிப்பதும், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களே தீர்மானிக்க இடமளிப்பதுமாகும்.
மென்மையான வழிகாட்டுதல்
பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையை அனுபவித்த ஒருவருக்கு எப்படி ஆதரவாக இருக்கலாம் என்பதற்கான சில எளிய மற்றும் நடைமுறை ஆலோசனைகளை ஒவ்வொரு தலைப்பையும் பார்க்கலாம். ஒவ்வொருவரும், ஒவ்வொரு உறவும் வித்தியாசமானது. உங்களுக்கு பொருத்தமாகத் தோன்றுவதை எடுத்துக்கொள்ளுங்கள்; பொருத்தமாக இல்லாததை விட்டுவிடலாம்.
எப்படி கேட்பது
யாராவது தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறை அல்லது பாலின அடிப்படையிலான வன்முறை பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது, எந்தத் தீர்ப்பும் வழங்காமல் அவர்களைக் கேட்பது ஒரு முக்கியமான ஆதரவாக இருக்கலாம்.
- உங்கள் முழு கவனத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் தொலைபேசியைச் சற்று ஓதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் பேசுவதற்கோ அல்லது சிறிது நேரம் அமைதியாக இருப்பதற்கோ இடமளியுங்கள்.
- அவர்கள் விரும்பும் அளவுக்கு மட்டும் பகிரட்டும். அவர்கள் பேச விரும்பாத விஷயங்களைப் பற்றி விவரங்களைக் கேட்டு அவர்களை வற்புறுத்த வேண்டாம்.
- அவர்கள் சொல்வதை நம்புங்கள். நடந்ததை நீங்களே விசாரிக்கவோ, தொடர்ந்து கேள்விகள் கேட்கவோ, உண்மையா என்று சரிபார்க்கவோ வேண்டியதில்லை.
- அவர்களுக்கு நேரம் கொடுங்கள். சில நேரங்களில் அவர்கள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம் அல்லது என்ன சொல்ல வேண்டும் என்பதே அவர்களுக்குத் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.
நீங்கள் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் அவர்களுடன் இருப்பதே போதுமானதாக இருக்கலாம்.
என்ன சொல்லலாம்
பாலியல் வன்முறைக்குப் பிறகு ஒருவருக்கு ஆதரவாக இருக்கும்போது, எளிமையானதும் நம்பிக்கையளிப்பதுமான வார்த்தைகள், அவர்கள் சொல்வது கேட்கப்படுகிறது மற்றும் அவர்கள் தனியாக இல்லை என்பதை உணரச் செய்யலாம்.
நீங்கள் இப்படிச் சொல்லலாம்:
“நான் உங்களை நம்புகிறேன்.”
“நடந்தது உங்கள் தவறு அல்ல.”
“என்னிடம் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.”
“நான் உங்களுடன் இருக்கிறேன்.”
“இப்போது உங்களுக்கு எது உதவியாக இருக்கும்?”
இத்தகைய வார்த்தைகள், அவர்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதையும், நடந்த வன்முறைக்கான பொறுப்பு அவர்களுடையது அல்ல என்பதையும் நினைவூட்டலாம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இன்னும் அவர்களிடமே உள்ளது என்பதையும் உணர்த்தலாம்.
என்ன சொல்லாமல் இருப்பது நல்லது
சில கேள்விகள் அல்லது கருத்துகள், நாம் நினைக்காமலேயே, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுவது போலவோ, அழுத்தம் கொடுக்கப்படுவது போலவோ அல்லது அவர்களின் அனுபவம் முக்கியமல்லாதது போலவோ உணரச் செய்யலாம்.
அதனால், இவற்றைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்:
- குற்றம் சாட்டுவது போல இருக்கும் கேள்விகள்: “நீங்கள் ஏன் அங்கே சென்றிர்கள்?” அல்லது “ஏன் அங்கிருந்து வெளியேறவில்லை?” போன்ற கேள்விகள்.
- அவர்கள் தயாராகும் முன் புகார் அளிக்கவும், வன்முறையை ஏற்படுத்தியவரை எதிர்கொள்ளவும் அல்லது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் அவர்களை வற்புறுத்துதல்.
- அந்த நேரத்தில் அவர்கள் வேறுவிதமாக ஏன் நடந்து கொள்ளவில்லை என்று கேட்பது.
- “இதைவிட மோசமாகவும் நடந்திருக்கலாம்.” போன்ற வார்த்தைகளால் நடந்ததைச் சிறிதாகக் காட்டுவது.
- அவர்களின் அனுபவத்தை வேறு ஒருவருடைய அனுபவத்துடன் ஒப்பிடுவது.
- அவர்கள் எப்படி உணர வேண்டும் அல்லது எவ்வளவு விரைவாக மீண்டு வர வேண்டும் என்று கூறுவது.
ஒருவருக்கு ஆதரவாக இருப்பது என்பது, அவர்களின் அனுபவத்தை மதிப்பதுடன், அவர்களுடைய முடிவுகளை அவர்களுக்குப் பதிலாக நீங்களே எடுக்காமல் இருப்பதுமாகும்.
தொழில்முறை ஆதரவைப் பெற அவர்களுக்கு உதவுவது
நீங்கள் அவர்களுடைய ஆலோசகராக மாற வேண்டியதில்லை. எல்லாவற்றையும் நீங்களே தீர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
அவர்கள் மனநல ஆதரவு, ஆலோசனை அல்லது வேறு ஏதேனும் தொழில்முறை சேவையைப் பெற விரும்பினால், அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வழிகளைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் உதவலாம்.
- கிடைக்கக்கூடிய ஆதரவு சேவைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, அவற்றைத் தொடர்புகொள்வதா இல்லையா என்பதை அவர்களே முடிவு செய்ய விடுங்கள்.
- அவர்கள் ஆதரவு வழிகளைப் பார்க்கும்போது அவர்களுடன் அமர்ந்திருப்பது போன்ற நடைமுறை உதவிகளை வழங்கலாம்.
- அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றால், ஒரு சந்திப்பிற்கு அவர்களுடன் செல்ல முன்வரலாம்.
- அவர்கள் விரும்பும் மொழியில் அல்லது அவர்களுக்கு வசதியான இடத்தில் கிடைக்கக்கூடிய ஆதரவைத் தேட அவர்களுக்கு உதவலாம்.
- அவர்கள் தொழில்முறை ஆதரவைப் பெற இன்னும் தயாராக இல்லாவிட்டால், அவர்களின் “இப்போது வேண்டாம்” என்பதையும் மதியுங்கள்.
அவர்களுக்குப் பதிலாக முடிவு செய்வது அல்ல; ஆதரவைப் பெறுவதற்கான வழியை அவர்களுக்கு எளிதாக்குவதுதான் நோக்கம்.
அவர்களின் முடிவுகளை மதிப்பது
ஒருவர் எடுக்கும் முடிவுகள், நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கும் முடிவுகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.
அதுவும் பரவாயில்லை.
- ஆலோசனை அல்லது வேறு தொழில்முறை ஆதரவைப் பெற விரும்புகிறார்களா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.
- வன்முறை குறித்து புகார் அளிக்கவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ அவர்களை வற்புறுத்த வேண்டாம்.
- தங்களுடைய அனுபவத்தை யாரிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று அவர்களின் முடிவை மதியுங்கள்.
- அவர்கள் உங்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளுங்கள். தனியுரிமை அல்லது பாதுகாப்பு குறித்து அவர்களுடன் பேச வேண்டிய ஒரு குறிப்பிட்ட காரணம் இருந்தால், அதை அவர்களுடன் திறந்த மனதுடன் கலந்துரையாடுங்கள்.
- அவர்கள் விரைவாக மீண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வைக்காமல், காலப்போக்கில் மென்மையாக அவர்களின் நிலையைப் பற்றி கேட்டறியுங்கள்.
ஆதரவு என்பது ஒருவருடைய தேர்வுகளைப் பறிப்பது அல்ல; அவர்களுக்கு இன்னும் அதிகமான தேர்வுகளை வழங்குவதாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கு ஆதரவாக இருக்கும்போது உங்களையும் கவனித்துக்கொள்வது
பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையை அனுபவித்த ஒருவருக்கு ஆதரவாக இருப்பது உங்களையும் உணர்வுபூர்வமாக பாதிக்கலாம்.
நீங்கள் கவலை, கோபம், உதவ முடியாதது போன்ற உணர்வு அல்லது மனதளவில் மிகவும் சோர்வாக இருப்பது போன்றவற்றை உணரலாம். இவ்வாறான உணர்வுகள் உங்களால் ஏதோ தவறு செய்யப்படுகிறது என்று அர்த்தமல்ல.
- உங்களுக்குத் தேவையான நேரங்களில் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ள உங்களுக்கு நீங்களே அனுமதி கொடுங்கள்.
- உங்களால் செய்யக்கூடியவை மற்றும் செய்ய முடியாதவற்றைப் பற்றி மென்மையான எல்லைகளை அமைத்துக்கொள்ளுங்கள்.
- உங்களுக்கும் உணர்வுபூர்வமான ஆதரவு தேவைப்பட்டால், நீங்கள் நம்பும் ஒருவரிடம் பேசுங்கள்.
- ஒருவருக்கு ஆதரவாக இருப்பது உங்கள் சொந்த நலனை பாதிக்கத் தொடங்கினால், தொழில்முறை ஆதரவைப் பெறுவது பற்றியும் சிந்திக்கலாம்.
- நீங்கள் ஒருவரைப் பற்றி மிகவும் அக்கறையுடன் இருக்கலாம். ஆனால் அவர்களின் முழுமையான மீட்புக்கான பொறுப்பு உங்களுடையது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களையும் கவனித்துக்கொள்வது, எல்லாவற்றையும் தனியாகச் சுமக்காமல் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க உதவும்.
இந்தத் தகவலை நீங்கள் பகிரலாம்
சில நேரங்களில், நீங்கள் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகவும் உதவியான விஷயம், அவர்களுக்காக ஒரு வாய்ப்பை எப்போதும் திறந்துவைத்திருப்பது மட்டுமே.
இந்தத் தகவலை அவர்களுடன் பகிரலாம், SafeHerSpace-இன் ஆதரவு சேவைகள் பட்டியலை அவர்களுக்கு அனுப்பலாம் அல்லது இவ்வாறு சொல்லலாம்:
“நீங்கள் தயாராக இருக்கும் போது, உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வழிகளை நாம் இருவரும் சேர்ந்து பார்க்கலாம்.”
அவர்கள் இன்றே எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
இது முற்றிலும் உங்கள் விருப்பம். உங்கள் பெயரையோ தனிப்பட்ட தகவல்களையோ பகிர வேண்டிய அவசியமில்லை.