சில நேரங்களில், ஏதோ ஒன்று உங்களுக்கு அசௌகரியமாக உணரச் செய்யலாம். ஆனால், அது ஏன் அப்படி உணரச் செய்கிறது என்பதை உங்களால் தெளிவாகச் சொல்ல முடியாமல் இருக்கலாம். உங்கள் மனதில் தொடர்ந்து நினைவுக்கு வரும் ஒரு கருத்தாக இருக்கலாம், நீங்கள் இன்னும் சம்மதிக்கத் தயாராக இல்லாத ஒரு வேண்டுகோளாக இருக்கலாம் அல்லது அந்த நேரத்தில் வேறு ஏதாவது சொல்லியிருக்கலாமே என்று பின்னர் நினைக்க வைக்கும் ஒரு உரையாடலாக இருக்கலாம்.அப்போது, “நான் தேவையில்லாமல் பெரிதாக எடுத்துக்கொள்கிறேனா?” அல்லது “நான் இப்படி உணர்வதற்கு உண்மையிலேயே காரணம் இருக்கிறதா?” என்று நீங்கள் யோசிக்கலாம்.
குறிப்பாக, அந்தச் சூழ்நிலையில் உங்களுக்கு அக்கறையான ஒருவர் அல்லது நீங்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால், இந்த உணர்வுகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம்.ஆனால், எல்லா கேள்விகளுக்கும் உடனடியாகப் பதில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏதோ ஒன்று அசௌகரியமாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.உங்கள் தனிப்பட்ட எல்லைகளைப் புரிந்துகொள்வது என்பது, உங்கள் உணர்வுகள், விருப்பங்கள் மற்றும் தனிப்பட்ட இடம் ஆகியவையும் மதிக்கப்பட வேண்டியவை என்பதை உணர்ந்துகொள்வதிலிருந்து தொடங்குகிறது.
ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று தோன்றும்போது அதன் அர்த்தம் என்ன?
அசௌகரியமான உணர்வுகள் பல்வேறு வழிகளில் வெளிப்படலாம். உங்களுக்கு மனதில் நிம்மதியின்மை ஏற்படலாம், யாரோ ஒருவர் அழுத்தம் கொடுப்பது போல உணரலாம், மனம் சோர்வடையலாம், எரிச்சல் ஏற்படலாம் அல்லது ஒரு விஷயத்தில் ஈடுபட விருப்பமில்லாமல் இருக்கலாம்.சில நேரங்களில், உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்திற்குக் கூட நீங்கள் சம்மதித்துக்கொண்டிருப்பதை உணரலாம். ஏனெனில், “இல்லை” என்று சொல்வது கடினமாக இருக்கலாம்.
அசௌகரியத்தை ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. அதேபோல், உங்களுக்கு அசௌகரியமாக இருக்கிறது என்பதற்காகவே ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்று எப்போதும் அர்த்தமில்லை.சில நேரங்களில், ஒரு சூழ்நிலை உங்களுக்குப் புதிதாகவோ சவாலாகவோ இருக்கலாம். வேறு சில நேரங்களில், உங்கள் தனிப்பட்ட எல்லைகள் கவனிக்கப்படாமல் போகின்றன அல்லது மீறப்படுகின்றன என்ற உணர்வுடன் அது தொடர்புடையதாக இருக்கலாம்.அதற்கான சரியான காரணத்தை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. சிறிது நேரம் நின்று, உங்களுக்கு உண்மையில் என்ன வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி கொடுங்கள்.
உங்கள் தனிப்பட்ட எல்லைகளை மதித்துக்கொள்வது ஏன் கடினமாக இருக்கலாம்?
பலர் சிறுவயதிலிருந்தே மற்றவர்களுடன் ஒத்துப்போக வேண்டும், முரண்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது மற்றவர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறார்கள்.கலாசார எதிர்பார்ப்புகள், குடும்பச் சூழ்நிலைகள் மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக, உங்களுக்கு அசௌகரியமாக இருப்பதை வெளிப்படுத்துவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம்.குறிப்பாக, மற்றவர் உங்களைவிட வயதில் மூத்தவராகவோ, அதிகாரம் கொண்டவராகவோ அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவராகவோ இருந்தால் இது இன்னும் சிரமமாக இருக்கலாம்.
“நான் அவர்களை ஏமாற்றிவிடுவேனோ?”, “நான் மரியாதையில்லாமல் நடந்துகொள்வதாக நினைப்பார்களோ?” அல்லது “இதனால் எங்கள் உறவு பாதிக்கப்படுமோ?” என்று நீங்கள் கவலைப்படலாம்.உங்கள் முடிவை மற்றவர் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அதை நன்றாக விளக்க வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கலாம். இத்தகைய கவலைகள், உங்களுக்கு உண்மையில் எது வசதியாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதை இன்னும் கடினமாக்கலாம்.
ஆனால், மற்றொருவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக உங்கள் சொந்தத் தேவைகளைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களின் உணர்வுகள் மீது அக்கறை கொண்டிருக்கும்போதும், உங்கள் நேரம், உடல், தனியுரிமை மற்றும் உறவுகள் தொடர்பான முடிவுகளை நீங்களே எடுக்கும் உரிமையை மதிக்கலாம்.
ஒவ்வொரு எல்லைக்கும் நீங்கள் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை
உங்கள் தனிப்பட்ட எல்லை என்பது, உங்களுக்கு எது வசதியாக இருக்கிறது, எது வசதியாக இல்லை என்பதைத் தீர்மானிக்க உதவும் ஒரு வரம்பாகும்.சில எல்லைகள் குறித்து, குறிப்பாகப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் சூழ்நிலைகளில், கலந்துரையாட வேண்டியிருக்கலாம். மற்ற சிலவற்றை எளிமையாகவும் நேரடியாகவும் சொல்லலாம்.
ஏன் என்று விளக்காமல் ஒருவரின் அணைப்பை மறுக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருக்கலாம். ஓர் அழைப்பை ஏற்க மறுக்கலாம் அல்லது குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதை நிறுத்துமாறு ஒருவரிடம் கேட்கலாம்.முன்பு நீங்கள் சம்மதித்த ஒரு விஷயத்தைப் பற்றிக்கூட உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக, ஒரு நண்பரிடம்:
“அந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவது எனக்கு வசதியாக இல்லை” என்று சொல்லலாம்.
அல்லது உங்கள் துணையிடம்:
“இப்போது அதைச் செய்ய எனக்கு விருப்பமில்லை” என்று சொல்லலாம்.
உங்கள் உணர்வுகளை நியாயப்படுத்தவோ, உங்களைத் தற்காத்துக்கொள்ளவோ வேண்டிய அவசியமின்றி, இந்த வார்த்தைகள் உங்கள் எல்லைகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
மற்றொருவர் உங்கள் எல்லையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வதும் அதற்கு அனுமதி வழங்குவதும் ஒன்றல்ல.உங்கள் முடிவை மதிப்பதற்கு, அவர்கள் உங்களுடைய கருத்துடன் உடன்பட வேண்டிய அவசியமில்லை.
“இல்லை” என்று சொன்னதற்காக ஒருவர் உங்களைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கினால் என்ன செய்வது?
சில நேரங்களில், நீங்கள் உங்கள் எல்லைகளை வெளிப்படுத்தும்போது மற்றவர்கள் ஏமாற்றமடைந்ததாகக் காட்டலாம்.வேறு சில சூழ்நிலைகளில், உங்கள் முடிவை மாற்றச் செய்வதற்காக அவர்கள் குற்றவுணர்வை ஏற்படுத்தலாம், கோபப்படலாம், மீண்டும் மீண்டும் வற்புறுத்தலாம் அல்லது உணர்வுபூர்வமான அழுத்தம் கொடுக்கலாம்.தங்களுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதற்கும், அந்த உணர்வுகளைச் சமாளிப்பதற்கான பொறுப்பை உங்கள் மீது சுமத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.“நீ என்னை உண்மையாக நேசித்தால், இதைச் செய்வாய்” என்று சொல்வது அல்லது நீங்கள் சம்மதிக்காவிட்டால் அன்பையும் பாசத்தையும் விலக்கிக்கொள்வதாக மிரட்டுவது போன்றவை, நீங்கள் விருப்பத்துடன் முடிவெடுப்பதற்குப் பதிலாக அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
உங்கள் எல்லைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது, நீங்கள் விரும்பாத உடல் தொடர்புக்கு வற்புறுத்துவது அல்லது “இல்லை” என்று சொல்வதற்கே நீங்கள் பயப்படும் சூழ்நிலையை உருவாக்குவது போன்ற நடத்தைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.சில சூழ்நிலைகளில், இத்தகைய நடத்தைகள் கட்டுப்படுத்தும் அல்லது துன்புறுத்தும் நடத்தைகளின் தொடர்ச்சியான ஒரு பகுதியாக இருக்கலாம்.மற்றொருவர் உங்கள் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக்கொண்டு வசதியாக உணரச் செய்வது உங்கள் பொறுப்பு அல்ல.உங்கள் எல்லையை வெளிப்படுத்துவது உங்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றால், அந்த நபரை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை.சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதைவிட உங்கள் பாதுகாப்பே முக்கியம்.
உங்கள் சொந்த எல்லைகளை எவ்வாறு மதிக்கலாம்?
உங்கள் எல்லைகளை உணர்ந்துகொள்வது என்பது, ஒவ்வொரு முறையும் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் அல்லது என்ன சொல்ல வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல.
உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும், உங்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதற்கும் நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
- சிறிது நேரம் எடுத்துக்கொள்ள உங்களுக்கு அனுமதி கொடுங்கள். ஒரு வேண்டுகோளுக்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டியதில்லை. “இதைப் பற்றி யோசித்துவிட்டுச் சொல்கிறேன்” என்று கூறுவது, முடிவெடுக்க உங்களுக்கு நேரத்தையும் இடத்தையும் வழங்கும்.
- உங்களுக்கு எது வசதியாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே அந்தச் செயலில் ஈடுபட விரும்புகிறீர்களா அல்லது சம்மதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை உணர்கிறீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள்.
- எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். “வேண்டாம், நன்றி”, “அது எனக்கு வசதியாக இல்லை” அல்லது “எனக்குச் சிறிது தனிமை தேவை” என்று சொல்லலாம்.
- உங்கள் எல்லைகள் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன்பு உங்களுக்கு வசதியாக இருந்த ஒரு விஷயம், இன்று அதேபோல் உணரப்படாமல் இருக்கலாம்.
- தேவைப்பட்டால் ஆதரவை நாடுங்கள். குறிப்பாக, ஒருவர் உங்கள் எல்லைகளைத் தொடர்ந்து புறக்கணித்தால், நம்பிக்கைக்குரிய ஒருவரோ பொருத்தமான ஆதரவு சேவையோ உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வழிகளைப் புரிந்துகொள்ள உதவலாம்.
இந்த வழிமுறைகளை நீங்கள் ஒவ்வொரு முறையும் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை.உங்கள் முடிவுகள் எப்போதும் மதிக்கப்படாத உறவுகளில், உங்கள் எல்லைகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வதற்கு நேரம் ஆகலாம்.உங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்வது முற்றிலும் பரவாயில்லை.
உங்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது
ஒருவர் உங்கள் எல்லைகளைத் தொடர்ந்து புறக்கணித்தால், நீங்கள் விரும்பாத செயல்களைச் செய்யும்படி வற்புறுத்தினால் அல்லது உங்களைப் பாதுகாப்பற்றதாக உணரச் செய்தால், உங்கள் கவலைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை.ஆதரவை நாடுவதற்கு முன் ஒரு சூழ்நிலை உடல் ரீதியான வன்முறையாக மாறும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
SafeHerSpace என்பது இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நம்பகமான தகவல்கள், ஆதரவு சேவைகள் மற்றும் மீட்புக்கான வளங்களுடன் இணைக்கும் பலமொழித் தளமாகும்.உங்களுக்கு ஏற்ற வேகத்தில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கக்கூடிய ஆதரவு வழிகளை ஆராய்வதை எளிதாக்குவதே எங்கள் நோக்கம்.
உங்கள் தனிப்பட்ட எல்லைகளை மதிப்பது என்பது சுயநலமாக நடந்துகொள்வதோ அல்லது மற்றவர்களை உங்களிடமிருந்து விலக்குவதோ அல்ல.உங்கள் வசதி, தனியுரிமை, தெரிவுகள் மற்றும் பாதுகாப்பும் முக்கியம் என்பதை உணர்ந்துகொள்வதே அதன் அர்த்தம். “இல்லை” என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் முடிவை மாற்றிக்கொள்வதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது.உங்கள் தனிப்பட்ட எல்லைகள் மதிக்கப்பட வேண்டுமென்றால், அவை நியாயமானவை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..